சென்னை: நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், ஓபிஎஸ் நீக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என கூறியதுடன், ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, உயர்நீதிமன்ற தீர்ப்பு நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என கூறினார்.
அதிமுக என்பது ஒன்றுதான், கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்து உள்ளது என்றவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என கூறிய எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். கோடநாடு விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தோம். ஜெயலலிதா ஓட்டுநராக கனகராஜ் ஒருபோதும் பணியாற்றியது இல்லை என்றும் கூறினார்.