சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டள்ள  விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு இன்று காலை 3 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில், அதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பித்துள்ளார். இதற்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  அதே வேளையில் இனறு முற்பகல்  விக்டோரியா கவுரி  நீதிபதியாக பதவி ஏற்ற உள்ளார்.

இந்த பரபரப்பான நிலையில்,  நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக பிரசாந்த் பூஷன், ராஜு ராமச்சந்திரன், ஆனந்த் குரோவர் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  வழக்கின் விசாரணை  இன்று காலை 9.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர வழக்காக விசாரிக்க இருந்தது.

இந்த நிலையில், வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த அமர்வு காலை 11மணி அளவில் வழக்கை விசாரிக்கும் என கூறப்படுகிறது.

நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, விக்டோரியா கவுரி தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச்சில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக உள்ளார். 2020 செப்டம்பரில் அவர் பதவியேற்பதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க.,வின் அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தற்போது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலிஜியம் அமைப்பு இவரது பெயரை பரிந்துரை செய்தது முதலே சர்ச்சை வெடித்து வந்தது. விக்டோரியா கவுரி பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்தவர் என்றும், அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விக்டோரியா கவுரி பா.ஜ.கவில் இருந்த போது இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதன் பேரில், “வெறுக்கத்தக்க பேச்சு” தொடர்பாக ஐ.பி.சி.,யின் 153A, 153B, 295A மற்றும் 505 பிரிவுகளின் கீழ் விக்டோரியா கௌரி மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர்.

விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கும் நிலையில் நேற்று அவரை கூடுதல் நீதிபதியாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணை வரும் நிலையில் இன்று காலை 10.35 மணிக்கு விக்டோரியா கவுரிக்கு தலைமை நீதிபதி பதிவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.