டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த மசோதா குடியரசு தலைவர் முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு, நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது,  பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியது.  மக்களவை, சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்  இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அண்மையில் நிறைவேறியது.

இதையடுத்து, இந்த மசோதா குடியரசு துணைத்தலைவரின் அனுமதி பெற அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி,   இந்த மசோதாவுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நேற்று (செப்டம்பர் 28ந்தி வியாழக்கிழமை)  கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். இந்த ஒப்புதல் மசோதா பிரதியை ஜகதீப் தன்கரிடம் இருந்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, இந்த மசோதா, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.