சென்னை: முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்டு 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடை பெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மத்தியஅரசு தேசிய கல்விகொள்கையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், மற்ற கட்சிகள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கு கவர்னர் அனுமதி தர மறுத்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம், உதகையில், தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநர் ரவி தலைமையில் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சையானது. அதை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மாநில அரசின் உரிமைகளைப் பயன்படுத்தி, இந்த மாநாடு நடைபெற உள்ளதாக வும், இந்த மாநாடானது, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படையில் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.