வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வழி என்ற ஊரில் அமைந்துள்ளது.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி, பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்–புலி; பாதர்–கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது. நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமியின் கருவறை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.
இலிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோயில். பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராகி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.

புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.