அகமதாபாத்:

10 ஆண்டுக்கு முந்தைய ஒரு வழக்கில் விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் குஜராத் வந்தனர். தொகாடியாவை கைது செய்ய உதவுமாறு குஜராத் போலீசாரிடம் ராஜஸ்தான் போலீசார் கோரியுள்ளனர்.

இந்நிலையில் பிரவீன் தொகாடியாவை குஜராத் அல்லது ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்துள்ளதாக இன்று தகவல் பரவியது. இது விஹெச்பி தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சோலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகாடியாவை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால் தேசிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து அகமதாபாத் போலீஸ் இணை கமிஷனர் ஜே.கே.பாத் கூறுகையில், ‘‘ ராஜஸ்தான் போலீசார் வந்து எங்களது உதவியை கோரியுள்ளனர். அதனால் நாங்களும் தொகாடியா இருக்கும் இடத்தை கண் டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். காலை 10.45 மணிக்கு விஹெச்பி அலுவலகத்தில் இருந்து ஆட்டோ மூலம் தொகாடியா சென்றுள்ளார்.

இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் தொகாடியா எவ்வித பாதுகாப்பு வீரர்கள் உதவியும் இல்லாமல் ஆட்டோவில் சென்றுள்ளார். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடிக்க விஹெச்பி தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். அவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இது குறித்து விஹெச்பி உள்ளூர் தலைவர் ராஞ்ச்சோத்பாய் பர்வாத் கூறுகையில், ‘‘ராஜஸ்தான் அல்லது குஜராத் போலீசாரால் தொகாடியா என்கவுன்டர் செய்து கொன்று இருப்பார்களோ என்று சந்தேகம் எழு ந்துள்ளது. அவரை எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட் டுள்ளது’’ என்றார்.