அமேதி:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி, உ.பி.யில் ரேபரேலி, அமேதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமேதியில் ராகுல் காந்தி பேசுகையில், “ பாஜக தொடர்ந்து பொய்களை கூறி வருகிறது. 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொருவருக்கம் ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இது வரை அதை வழங்கவில்லை. இதுபற்றி வாய் திறக்கவும் மறுத்து வருகின்றனர்.

நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இது குறித்தும் பாஜக ஒரு வார்த்தை கூட பேசுவது கிடையாது. பாஜக.வின் பொய் பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘அமேதி தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட வளர்ச்சி பணிகளான நெடுஞ்சாலை, ரெயில் வசதி, உணவு பூங்கா போன்றவற்றையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். என்ன நடந்தாலும் அமேதியில் உணவு பூங்கா நிறுவப்படும்.

அனைத்து விவசாயிகளும் தங்களது உற்பத்தி பொருட்களை இந்த பூங்காவில் விற்பனை செய்து நல்ல விலை பெறலாம். பாஜக ஆளும் குஜராத்தில் 30 லட்சம் வேலையில்லா இளைஞர்கள் உள்ளனர்’’என்றார்.

இங்கு பேசி முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்ற ராகுல்காந்திக்கு எதிராக பாஜக தொண்டர்கள் சிலர் கோஷமிட்டனர். இதனால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.