சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மூன்று கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. தமிழகத்திலுள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது.

 நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் கடந்தஜூன் 12-ஆம் தேதி தொடங்கியது.  இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு, கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்புக்கு மொத்தமாக 15ஆயிரதுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் நேரடியாகவும், மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.