சென்னை:
சேலத்தில் 900ஏக்கரில் அமைய உள்ள கால் நடைப் பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 900 ஏக்கர் நிலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,அதன்படி, சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோடு அருகே கால்நடை பராமரிப்புத்துறைக்குச் சொந்தமான இடத்தில், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா அமைய உள்ளது.
இதுகுறித்து நேற்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின்போது, உலகத் தரம் வாய்ந்த கட்டிடங்கள் வடிவமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் அங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி உள்பட கட்டிடங்கள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நவீன கால்நடைப்பூங்கா அமைப்பது தொடர்பாக, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்ய இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
ஏற்கனவே ஒரத்தநாடு திருநெல்வேலி நாமக்கல் சென்னை உள்பட 4 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ள நிலையில், 5 வதாக சேலத்தில் கால்நடை மருத்துவமனை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.