டில்லி
ஊனமுற்ற ராணுவ வீரர்களில் ஓய்வூதியத்தில் இருந்து உச்சநீதிமன்ற தடையை மீறி வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது
பல ராணுவ வீரர்கள் தங்கள் பணியின் போது காயம் டைந்து உடல் ஊனம் அடைகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியத்துக்கு வருமான வரி விதிக்கப்படுவது குறித்து ஏற்கான்வே சர்ச்சைகள் எழுந்தன. அதையொட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஊனமுற்ற வீரர்கள் ஓய்வூதியத்துக்கு வரி விதிக்க இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் நிதி அமைச்சகம் மற்றும் நேரடி வரி விதிப்பு ஆணையம் இரண்டும் இணைந்து பணியில் இல்லாத ஊனமுற்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத்துக்கு வரி விதிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இந்த வருடத்துக்கான ஊனமுற்ற வீரர்கள் ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
மூத்த ராணுவ வீரர்களில் பலர் அரசின் இந்த செய்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்கனவே ராணுவ கணக்கு தணிக்கையாளர் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையின் அடிப்படையில் அரசின் உத்தரவை மறு பரீசிலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட இந்த தொகையில் இருந்து வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்த வேண்டிய வரியையும் தற்போது பிடித்தம் செய்துள்ளதால் பிப்ரவரி மாதம் பல வீரர்கள் ரூ.100 மட்டுமே ஓய்வூதியமாக பெற்றுள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் டிபி சிங், “நா இதில் நேரடியாக பாதிக்கப்படவில்லை எனினும் எனது சக வீரர்கள் துயரம் அடைவது எனக்கு வேதனை அளிக்கிறது. தனது இளமையை நாட்டுக்காகத் தியாகம் செய்த மூத்த வீரர்கள் பலருக்கு முதுமையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை ராணுவ செயலர் கேட்டுள்ளார். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.