மும்பை

பிரபல இந்தி நடிகர் காதர்கான் நேற்று இரவு கனடாவில் மரணம் அடைந்தார்.

 

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் காதர்கான் கடந்த 1973 ஆம் வருடம் தாக் என்னும் இந்திப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார். ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த இவருக்கு தற்போது 81 வயதாகிறது. இவர் வில்லன், குணசித்திர நடிகர், காமெடி நடிகர் என பலவ் வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். சுமார் 250 படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.

காதர்கான் தற்போது கனடாவில் வசித்து வந்தார். சுமார் 16-17 வாரங்களாக அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலை தேற பிரார்த்தனை செய்வதாக அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாக வந்த செய்தியை அவர் மகனும் இந்தி நடிகருமான சர்பிராஸ் கான் மறுத்தார்.

நேற்று இரவு கனடா நேரப்படி 6 மணிக்கு காதர்கான் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை உறுதிப்படுத்திய அவர் மகன் சர்பிராஸ் கான் அவரது இறுதிச் சடங்குகள் கனடாவில் நடைபெறும் எனவும் அதற்காக குடும்பத்தினர் அனைவரும் கனடா செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.