ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகையான ஜமுனா வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 86.
தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை ஜமுனா இன்று காலை காலமானதை அடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தெலுங்கு பிலிம் சேம்பரில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நடிகை ஜமுனா, 1936 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஹம்பியில் பிறந்தார்.
சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்த ஜமுனா 1952 ஆம் ஆண்டு முதன்முதலாக தெலுங்கில் கரிகாபதி ராஜாராவ் இயக்கிய புட்டிலு என்ற திரைப்படத்தில் தனது 16வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1955 இல் வெளியாகி டோலிவுட் வரலாற்றில் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பெற்ற எல்.வி. பிரசாத்தின் மிஸ்ஸியம்மா திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலமானார் ஜமுனா.
தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் தங்க மலை ரகசியம், நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மனிதன் மாறவில்லை, மருதநாட்டு வீரன், தவிர கமலின் தாயாக. தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
1954-ல் பணம் படுத்தும் பாடு என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜமுனா 1955-ல் மிஸ்ஸியம்மா படத்தில் நடித்து புகழை அடைந்தார்.
குழந்தையும் தெய்வமும் படத்தில் இடம்பெற்ற அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் என்கிற அருமையான பாடலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனத்துக்கு நெருக்கமானார். ஹிந்திப் படங்களில் நடித்து ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றார்.
நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, 1989ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990களின் இறுதியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் வயதுமூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார் ஜமுனா. அவருக்கு வம்சி ஜூலூரி என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். . ஜமுனாவின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.