டில்லி

டில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் இடிஅயே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

யமுனை நதியில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஓடியது. தாழ்வான பகுதிகளைத் தாண்டி, ஐடிஓ, சிவில் லைன்ஸ், தலைமைச் செயலகம் உட்பட முக்கியப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

டில்லியின் தற்போதைய நிலை குறித்து பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் வியாழக்கிழமை டிவிட்டரில்  “டில்லி வாசிகளே விழித்துக் கொள்ளுங்கள். டில்லி சாக்கடையாக மாறிவருகிறது. இங்கு எதுவும் இலவசம் இல்லை, இதுதான் பரிசு” என்று தெரிவித்துள்ளார்.  கேஜ்ரிவால் அரசின் இலவச மின்சாரம், இலவச தண்ணீர் திட்டத்தினை காம்பீர் இதன் மூலம்கேலி செய்துள்ளார்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், ,”பாஜகவுக்கு கூட்டாட்சியில் நம்பிக்கை இல்லை என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஹரியானா அரசு தொடர்ந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்குப் பதிலாக, 5 – 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விட்டால் என்ன நடந்து விடும்? குறைந்தபட்சம் டெல்லியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்காவது அவகாசம் கிடைத்திருக்கும். பாஜக எப்போதும் அதன் அழுக்கு அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

பஞ்சாபின் தொடர் எதிர்ப்பு காரணமாக இமாச்சல பிரதேச அரசு, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் மூன்று நாட்களுக்குத் தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைத்தது. ஆனால், கல்வியறிவு இல்லாத ஹரியானா அரசு அப்படிச் செய்யவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.