ஆந்திராவில் பணி புரிய தெலுங்கு அவசியம் : வெங்கையா நாயுடு

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் பணிபுரிய தெலுங்கு மொழி அறிவு அவசியம் என சட்டம் இயற்றுமாறு சந்திரபாபு நாயுடுவை வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜயவாடாவில் நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.  இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துக் கொண்டு உரை ஆற்றினார். அந்த உரையில் அவர் தாய் மொழியின் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.

வெங்கையா நாயுடு, “ஆந்திர மாநிலத்தில் பணி புரிவோருக்கு தெலுங்கு மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.  மாணவர்கள் எந்த மொழியில் கல்வி கற்றாலும், அதாவது ஆங்கில மீடியமாக இருந்தாலும் தெலுங்கு மொழியையும் கண்டிப்பாக கற்றாக வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.  இந்த சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என நான் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கேட்டுக் கொள்கிறேன்.  இதன் மூலம் அனைவரும் தெலுங்கு மொழி கற்க முடியும்.

நான் மற்ற மொழிகளை கற்பதற்கு எதிர்ப்பாளன் அல்ல.  அதே நேரத்தில் தாய் மொழியில் தங்கு தடையின்றி பேச எழுத கற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.  ஆங்கில மீடியத்தில் படித்தாலும் தாய் மொழியை மறக்காமல் அதையும் ஒரு பாடமாக மாணவர்கள் படிப்பது அவசியம் ஆகும்

நான் தெலுங்கு மீடியத்தில் படித்தேன்.  தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கிறேன்.  சந்திரபாபு நாயுடுவும் அதே போல தெலுங்கு மீடியத்தில் படித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார்.  அவ்வளவு ஏன்? நமது பாரதப் பிரதமர் மோடி ஆங்கில மீடியத்தில் படிக்கவில்லை.  இருந்தும் நமது நாட்டை தனது ஆட்சியின் மூலம் வலிமை மிக்க நாடாக்கி வருகிறார்.  அதனால் ஆங்கில மீடியத்தில் படித்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்பது சரி அல்ல” என தனது உரையில் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு இவ்வாறு கூறுவது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த செப்டம்பர் மாதம் ஒரு விழாவில் அனைத்து இந்தியர்களும் ஆங்கிலத்தை விடுத்து அவரவர் தாய் மொழியில் பேச வேண்டும் என கூறினார். ஜூன் மாதம் அவர் செய்தி மற்றும் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போது நடந்த ஒரு விழாவில் இந்திதான் நமது தேசிய மொழி என்றும் ஆங்கிலத்துக்கு தேவை இல்லாமல் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது என கூறினார்.

நமது நாட்டின் சட்ட எண் 343ன் படி ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டுமே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது,

Tags: Venkaiya Naidu asked Chnadrababu Naidu to make Telugu Compulsory in AP