பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை ஒரு பண மோசடியே : முன்னாள் பாஜக அமைச்சர்

டில்லி

முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை பண மோசடி நடவடிக்கை என வர்ணித்துள்ளார்.

முன்னாள் பா ஜ க அமைச்சர் அருண் ஷோரி பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், அரசியல் பிரமுகர் என பன்முகம் கொண்டவர் ஆவார்.  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஆசிரியராக பணி புரிந்தவர்.  மேக்சேசே மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றவர்.  இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது :

”பணமதிப்புக் குறைப்பு என்பது இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் பண மோசடியே.  அரசாலேயே நடத்தப்பட்ட ஒரு மோசடி தன் இது.   பல கருப்புப் பண முதலைகள் தங்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்ள இந்த நடவடிக்கை உதவி உள்ளது.  கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.  ஆனால் உண்மையில் அது நடைபெறவில்லை.

ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் 99% மேல் திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்துள்ளது.  இதன் மூலம் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப்பணம் ஒழிக்கப்படவில்லை என்பது நன்கு விளங்குகிறது.   கருப்புப்பணம் ஒழுப்புக்கு பதில் சட்டபூர்வமாக கருப்புப் பணம் வெள்ளை ஆகி உள்ளது.

ஜி எஸ் டி வரிவிதிப்பு நமது நாட்டுக்கு தேவையான ஒன்று.  ஆனால் அது சரியாக அமுல்படுத்தப்படவில்லை.  அத்துடன் மிக மோசமாக கையாளப்படுகிறது.  சுதந்திர இந்தியாவின் மாபெரும் பொருளாதார சீர்திருத்தமான ஜி எஸ் டி தற்போது தவறான வழிமுறைகளுடன் செயல்படுத்தப் பட்டுள்ளது.”  என கூறி உள்ளார்.

முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இதே கருத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arun shourie said Demonetisation is money laundering