சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது சென்னை உயர்நீதி மன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பான அரசின் அறிக்கையை மட்டும் பெற்று கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் இருக்கும் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022, டிசம்பர் 26-ம் தேதி மலம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று ( ஜுலை 6ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆ4ரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், இந்த வழக்கு தொடர்பாக ஜூலை மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
இதையடுத்து வாதாடிய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் முனியப்பராஜ் ஆகியோர், வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு என கூறினர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் காவல் துறையினரின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், இதுவரை ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும், இந்த விவகாரம் கறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது என விளக்கமளித்தார்.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இரு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளி வைத்தனர்.