தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது கட்சி நிகழ்ச்சிக்காக மே 5-ம் தேதி சேலம் வந்த வேல்முருகன் ரயில் நிலையம் அருகிலுள்ள அஸ்வா பாக்கில் ரூம் நம்பர் 111-ல் தங்கினார். நள்ளிரவு இரண்டு மணியளவில் ரூம் கதவை யரோ படபடவென தட்டுவது போல சத்தம் கேட்டிருக்கிறது.
திடுக்கிட்டு விழித்திருக்கிறார் வேல் முருகன்.
அழைப்புமணியை அடிக்காமல் அதுவும் தடதடவென தட்டப்பட்டதால்,எச்சரிக்கை உணர்வோடு, அமைதியாக இருந்திருக்கிறார்.
கதவைத் திறக்காமல் ரிசப்ஷனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அங்கிருந்தவர்களோ, “உங்களைத் தேடி யாரும் வரவில்லையே” என்று கூறியிருக்கிறார்கள்.
காலை விடிந்ததும் கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்து கூறியிருக்கிறார் வேல் முருகன்.
இந்த சம்பவம் குறித்து த.வா.கட்சியினர், “ஓட்டல் ரிசப்ஷனில் கேட்டதற்கு, யாரும் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும், அருகிலேயே சுடுகாடு இருக்கிறது. அதனால் பேய் அல்லது அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கலாம். இங்கே வழக்கமாக தங்கும்பவர்கள் கூட அடிக்கடி, ‘கதவ யாரோ தட்டுறாங்க’ என்று கூறியிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஓட்டல் இன்சார்ஜிடம் சி.சி.டி.வி. புட்டேஜை கேட்டதற்கு, ‘அப்போது மின்தடை இருந்தது. யு.பி.எஸ்ஸும் ஒர்க் ஆகவில்லை. அதனால் சி.சி.டி.வி. பதிவாகவில்லை என்று அலட்சியமாக சொல்கிறார்.
இது குறித்து வேல்முருகன், “. ‘’காவிரி விவகாரம், ஐ.பி.எல். எதிர்ப்பு போன்றவை காரணமாக மத்திய அரசு என்னை குறிவைக்கிறது என்று தோன்றுகிறது. சேலம் ஓட்டலில் என் அறைக் கதவு தட்டப்பட்டதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இது குறித்து டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பியிருக்கிறேன். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன்” என்றார்.