சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழங்கில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடயே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, தடையை மீறி தூத்துக்குடி சென்றதால் நேற்று கைது செய்யப்பட்டார். விமான நிலையத்திற்குள்ளேயே அவரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி விரைந்த விழுப்புரம் போலீசார், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை கைது செய்தனர். பிறகு திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்