வேலூர்,
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள வங்கியில் 22 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரசித்தி பெற்ற மருத்துவமனையான வேலூர் சிஎம்சி மருத்துவமனையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை இயங்கி வருகிறது.
இந்த வங்கியில் நள்ளிரவு யாரோ வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே சென்று லாக்கரை உடைத்து கொள்ளையடித்துள்ளது தெரிய வந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், கொள்ளை தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வேலூர் வடக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.பி. பகலவனும் கொள்ளை நடந்த வங்கியை ஆய்வு செய்தார்.
அப்போது, வங்கியில் 22 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாகவும், கொள்ளை விஷயமாக தடயவியல் சோதனை நடைபெற்று வருகிறது என்றும், இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்கள் யாருக்கேணும் தொடர்பு இருக்குமா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
வங்கியின் கதவுகளோ அல்லது பூட்டோ உடைக்கப்படாத நிலையில் அங்கிருந்த பணம் மாயமாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.