வேலூர்: பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது வேலூர் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள சத்துவாச்சாரி  மற்றும் 7 பேர் சேர்ந்தது, வேலூர் மாவட்டம் காட்பாடியில் 5.88 ஏக்கர் நிலத்தை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளனர். இது சரியான முறையில் விற்பனை ஆகாததால்,  விற்பனை செய்யப்படாமல் மீதமிருந்த 5.27 ஏக்கர் அளவுக்கு  நிலத்தை 7 பங்குதாரர்களும் தலா 75 சென்ட் வீதம் பிரித்து பத்திரப் பதிவு செய்து கொண்டனர். இதை சேகர் ரெட்டி, 7 பங்குதாரர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். இந்த பத்திரப்பதிவானது  1-12-2016-ம் ஆண்டு காட்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பபட்டு உள்ளது.

இதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி தற்போது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை 4 ஆண்டுகளுக்கு பிறகு, மே 13ந்தேதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக, இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் அப்போதைய காட்பாடி சார் பதிவாளரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்ட சார் பதிவாளராக உள்ள சம்பத், அப்போதைய முத்திரைக் கட்டண துணை ஆட்சியரும் தற்போதைய தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளராக உள்ள அப்துல் முனீர், நிலத்தின் பவர் ஏஜென்ட் பரசுராமன் மற்றும் தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி மற்றும் நிலத்தை விற்பனை செய்த பங்குதாரர்கள் 7 பேர் உட்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

புகாரில்,  சுமார் 13 கோடியே 72 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 520 மதிப்புக்கு சேகர் ரெட்டிக்கு பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.