சென்னை:

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிப்படப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்  தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடநத ஜூன் மாதம் 28ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு முடிவின்படி,  மானிய கோரிக்கைகளுக்கான  சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூலை 31ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, விடுமுறை நாட்களை தவிர மொத்தம் 23 நாட்களை சபை நடைபெறும் என்று கூறப்பட்டது.

கடந்த 1ந்தேதி முதல் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள், அதற்கான துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறும் வகையில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவைக்கு ஆகஸ்டு 5ந்தேதி வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், சபையை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தொடரை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.