மூன்றே மாதத்தில் ரூ. 2.74 கோடி உயர்ந்த ஏ.சி.சண்முகத்தின் சொத்து! பொதுமக்கள் வியப்பு

Must read

வேலூர்:

மூன்றே  மாதத்தில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் குடும்ப சொத்து மதிப்பு  ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி மக்கள் ஆ….வென வாயை பிளந்துள்ளனர்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக கூட்டணி சார்பில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். அவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு – அதிமுக

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு வுடன் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு விவரங்கள்:

ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 49 லட்சத்து ஒரு ஆயிரத்து 470.63 மதிப்பிலான சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் ரூ. 22 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 501.22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.

ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470,

வங்கியிருப்பு ரூ. 79,19,627.63,

பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.24 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 680,

இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 16 ஆயிரத்து 193,

நகைகள் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500,

அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 9,21,230,

வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரத்து 543.22,

பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 614,

காப்பீட்டு முதலீடு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம்,

இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 014,

நகைகள் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 100 அடங்கும்.

இத்துடன்,  விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணா மலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

அத்துடன்,  ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.11 கோடியே 91 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி  தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டபோது, ஏ.சி.சண்முகம்  வேட்புமனுவுடன் தாக்கல் செய்திருந்த சொத்துப்பட்டியலில், மொத்த சொத்து மதிப்பு  ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தற்போது தாக்கல் செய்யப்பட்ட சொத்துப்பட்டியலில்குடும்பச் சொத்து மதிப்பாக ரூ. 193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 என குறிப்பிட்டு உள்ளார்.

3 மாதத்தில், ஏ.சி.சண்முகத்தின் குடும்ப சொத்து மதிப்பு  ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தற்போது மொத்தம் ரூ.58.75 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் – சொத்து மதிப்பு

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோரது பெயர்களில் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்த்திடம் மொத்தம் ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 மதிப்பிலும், அவரது மனைவியிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரத்து 684 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் உள்ளன.

இதில் கதிர் ஆனந்த் பெயரில் கையிருப்பாக பணம் ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16,

அவரது மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879,

கதிர் ஆனந்த் பெயரில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 437 மதிப்பிலான நகைகளும்,

அவரது மனைவி பெயரில் ரூ.27 லட்சத்து 18 ஆயிரத்து 637 மதிப்பிலும்,

மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடு, நகைகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கதிர் ஆனந்த் பெயரில் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்தின் மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்த் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  3 மாதங்களில் கதிர் ஆனந்தின்  குடும்ப சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்துள்ளது.

 

More articles

Latest article