சென்னை:

மிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், பல் மருத்துவப் படிப்பில் சுமார் ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்த இடங்களை நிரப்பும் நோக்கில், மேலும் 3 நாள் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.

நிர்வாக ஒதுக்கீட்டின் படி தனியார் கல்லூரிகளில் 852 மருத்துவ இடங்களும், 690 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

பொதுக் கலந்தாய்வு தொடங்கிய 3 நாள்களில் சென்னை  உள்பட 24 அரசு மருத்துவக் கல்லூரி களிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதும் நிரம்பி விட்டன. அதுபோல சென்னையில் உள்ள ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் எஞ்சியுள்ள மருத்துவ இடங்களில் சேர்வதற்காக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் பல் மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், தனியால் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள  சுமார் 1000 இடங்கள் காலியாகவே உள்ளது. இதை நிரப்பும் நோக்கில் மேலும் 3 நாட்கள் கலந்தாய்வை தமிழக அரசு நீட்டித்து உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஜி செல்வராஜன், முதலாவது கட்ட கவுன்சிலிங்கில், பல் மருத்துவப் படிப்பில்  1,070 இடங்கள்  உள்ளது. இதில்,  அரசு ஒதுக்கீடு 417ம், நிர்வாக இட ஒதுக்கீடு படி 640 இடங்களும் உள்ளன.

இந்த இடங்கள் பூர்த்தியாகாத நிலையில், மேலும் சில தனியார் பல் கல்லூரிகள் அரசு தங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களை அரசுக்கு ஒதுக்குவதாக அறிவித்து உள்ளன. அதையடுத்து, கவுன்சிலிங்கில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார்.