சென்னை:

வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக் கான ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த விசாரணைகளை தொடர்ந்து, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாம் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தேர்தல் ரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் அங்கு போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்டது என்று வருமான வரித்துறை உறுதி செய்ததை தொடர்ந்து அந்த மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து, அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. திட்டமிட்ட நாளில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது இன்றே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.