சென்னை:
ஜெவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்து சிக்கலில் சிக்கிய வேலூர் கார்த்தியாயினி, முன்னாள் துணைசபாநாயகரும், திமுகவில் இருந்து அன்மையுல் பாஜகவுக்கு தாவிய வி.பி.துரைசாமி, முன்னாள் அதிமுக எம்.பி.யான சர்ச்சை புகழ் சசிகலா புஷ்பா உள்பட பலருக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக மாநில பாஜக தலைவர் எல். முருகன் நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளி யிட்டார். பெரும்பாலும் ஏற்கனவே வகித்த பதவிகளில் இருந்தவர்கள் பலர் அதே பதவியிலேயே நீட்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும், மாற்று கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த கட்சித் தாவியர்களுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.
திமுகவில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பொதுச்செயலாளராக இருந்த வானதி ஸ்ரீனிவாசன் மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் கட்சியின் மாநில பொதுச்செயலாளராகவும்,
சமீபத்தில் பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில இளைஞர் அணி தலைவராக வினோஜ் பி. செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி. யாக இருந்தவர் சசிகலா புஷ்பா பாஜகவின் தேசிய குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
தமாகாவில் இருந்து பாஜகவுக்கு தாவிய மாஜி பழனி தொகுதி எம்.பி. எஸ்.கே. கார்வேந்தனுக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி, மாநில செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமிக்கப்பட்டு உள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ அரக்கோணம் சீனிவாசன், கோவை ராமநாதன், கடலூர் வேதரத்தினம், நெல்லை பொன் விஜயராகவன் மற்றும் மாஜி எம்.பிக்கள் கள்ளக்குறிச்சி செளந்தரம், ஆரணி ராமதாஸ், தருமபுரி நரசிம்மன் ஆகியோரும் பாஜகவின் தேசிய பொதுக் குழு உறுப்பினர்களாக்கப்பட்டிருக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய மாஜி மேயர் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கு மாநில செயலாலர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இவர் அதிமுகவில் இருந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாட்க நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு குறித்து விமர்சித்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெயர் இந்த பட்டியலில் இடம்பெற வில்லை. அவருக்கு தேசிய அளவிலான பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு, சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வர் துரிதமாக செயல்பட்டு, பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எல்லாவற்றிலும் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.