சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமமுக அமைப்புச் செயலாளரும், வேலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார்.
வேலூர் தொகுதியை முன்னாள் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், ஏற்கனவே, தமாகா, அதிமுக, அமமுக என பல கட்சிகளுக்கு தாவிய நிலையில், இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
வேலூர் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் , சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். காங்கிரஸ் கட்சி சார்பில் நான்கு முறை வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரசில் மிக முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தவர் ஞானசேகரன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது அக்கட்சில் இணைந்து முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். மீண்டும் காங்கிரசில் தமாகா இணைந்த போதும், அதன் பின் வாசன் தமாகாவை ஆரம்பித்த போதும் அவருடனேயே பயணித்தார்.
இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் திடீரென ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்த வேலூர் ஞானசேகரனுக்கு அமமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக அடியோடு வீழ்ந்த நிலையில், அங்கிருந்தால் காலத்தை ஓட்ட முடியாது என்று எண்ணிய ஞானசேகரன், தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
இன்று தனது ஆதரவாளர்கள் பலருடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த ஞானசேகரன், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்.