விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்து 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என்பதால் 8 வழிச்சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். இதற்கு மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசுவார். ஏனென்றால் அவர் முதல்-அமைச்சராக இருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக உள்ளோம். இதனால்தான் வேலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்.

தற்போது தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் வழங்கும் போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார்.