சென்னை: டிசம்பரில் பயன்பாட்டுக்கு  கொண்டு வரும் வகையில்,   வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 90 சதவிகித பணிகள் முடிவடைந்தை நிலையில், மின்சார பாதையில் மின்சாரம் செலுத்தி சோதனை ஓட்டம் நடத்தப்படுவது மட்டுமே பாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை ஓட்டமும்  நவ.30 அன்று  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்  சென்னை மக்களின் 20 வருட காத்திருப்பு  முடிவுக்கு வர உள்ளது.

 வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான 5 கி.மீ. பிரிவு பல்வேறு சட்டச்சிக்கல் காரணமாக முடிவுபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில்,   20 ஆண்டுகளுக்குப் பின் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில்,   தலைக்கு மேல் செல்லும் இழுவை பாதைக் கம்பிகளில் மின்சாரம் செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த சோதனை நவம்பர் 30ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ இந்த மின்சார  கம்பிகளில்,   25,000 வோல்ட் உயர் மின்னழுத்தம் இருக்கும். மின்சாரம் பாய்ச்சப்பட்ட வுடன் இந்தக் கம்பிகள் உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், பொதுமக்கள் தண்டவாளங்கள் மற்றும் கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார மயமாக்கப்பட்ட எந்தவொரு பிரிவிலும், மின்சாரம் பாய்ச்சுவது என்பது சோதனைகள் மற்றும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முந்தைய இறுதி மைல்கல் ஆகும்.

OHE கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சப்படுவதைத் தொடர்ந்து, மின்சார இன்ஜின் மற்றும் EMU ரயில் சோதனை ஓட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கும் இந்த 5 கி.மீ. விரிவாக்கப் பிரிவில், உள்ளகரம் (Ullagaram) மற்றும் ஆதம்பாக்கம் (Adambakkam) ஆகிய 2 நிலையங்கள் உள்ளன.

சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தின் விரிவாக்கம்  அறிவிக்கப்பட்டபோது, ரூ.495 கோடி என மதிப்பிடப்பட்ட இத்திட்டம், 2020ஆம் ஆண்டில் ரூ.730 கோடி என்ற திருத்தப்பட்ட செலவில் புத்துயிர் பெற்றது. நவ.7 அன்று, CSIR–Structural Engineering Research Centre (CSIR-SERC) அமைப்பானது உயர்த்தப்பட்ட தாங்குதளத்தின் (Elevated Corridor) சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கருவிமயமாக்கல் (instrumentation) மற்றும் சுமை தாங்கும் சோதனை (load testing) ஆகியவற்றை மேற்கொண்டது.

இதையடுத்து இறுதிக்கட்டமாக மின்சாரம் பாய்ச்சப்பட உள்ளது. நவம்பர் 30ந்தேதி அன்று  மின்சாரம் பாய்ச்சப்பட்ட பிறகு சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். அதன் பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியவுடன், இந்த வழித்தடம் பயணிகளுக்கான செயல்பாட்டிற்குத் தயாராகிவிடும்.

இந்த புதிய பாதை செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், பள்ளிக் கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த MRTS பிரிவு டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது?