சென்னை:
ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நாளை காலை முதல் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
காவல் நிலையத்தில், வாகனங்களின் உரிமையாளர்கள், அதற்குரிய அசல் ஆவனங்களுடன், ஜாமினுக்கு ஒரு நபர் ஆதாருடனும் வந்து வாகனங்களை உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி வெளியே சுற்றியதாக மாநிலம் முழுவதும் சுமார் 1.94 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், சுமார் 1.80 லட்சம் வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை சுமார் 90 லட்சம் ரூபாய் வரை அபராதத் தொகையை வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக டிஜிபி அறிவித்துஉள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கை மீறியதாக மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும்.
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும். உடன் ஜாமினுக்கு ஒருவரும் ஆதார் கார்டுடன் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.