சென்னை:
திங்கட் கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனாலும், காய்கறிகளின் கையிருப்பு குறைந்ததாலும் விலை கடுமையாக உயர்ந்தது.

மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி, 500 ரூபாயாகவும், வெங்காயம் ஒரு மூட்டை 1500ரூபாயாகவும் உயர்ந்தது.

சில்லறை விற்பனையிலும் அனைத்து காய்கறிகளும் கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்ந்தது. குறிப்பாக, 60 ரூபாய்க்கு விற்பனையான கேரட் 120 ரூபாயாகவும், 80 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 160 ரூபாயாகவும் உயர்ந்தது.