தமிழரின் வரலாறு நீண்ட நெடும் வரலாறு மிக்கது என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.. ஆனால் நமது, வரலாற்று ஆவணங்களை எந்த லட்சணத்தில் பாதுகாக்கிறோம் என்பதை நினைத்தால் ரத்தக்கண்ணீரே வந்துவிடும்.
வெள்ளையரை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னன் வீரபாண்டிய கட்டமொம்மன் என்பதும், ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டான் என்பதும் நமக்குத் தெரியும்.
ஆனால் அவன் தூக்கிலிடப்பட்ட கயிற்றைக்கூட நம்மால் காப்பாற்ற முடியவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைத் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது.
அப்போதுதான் அந்த (தூக்கிலிட்ட) கயிறு திடுமென காணாமல் போனது.இதை, இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்டார்.
இந்த நிலையில், “கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறு காணாமற் போய்விட்டது” என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
“வராலாற்றில் முக்கியத்துவம் உள்ள பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த மதிப்பு உண்டு. ஆகவே அந்த தூக்குக் கயிறு திருடப்பட்டு, வெளிநாட்டில் விற்கப்பட்டிருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இனியாவது மாநில, மத்திய அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும் ” என்று ஆதங்கப்படுகின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.
(இன்று (டிசம்பர் 3 ) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம். )