ஸ்டாலின் – காமராஜ்

 

குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டிக் கொடுப்பதை குற்றமாகக் கூறுகிறார் தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் அவர்களது திமுக ஆட்சிதான் குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும். வழக்கத்தை ஆரம்பித்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்  உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“அ.தி.மு.க. ஆட்சியில் எந்தக் குறையும் சொல்ல முடியாததால்,, குடும்ப அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பேசுகிறார் மு.க. ஸ்டாலின்.  ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவதா? என்றும், ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்னஆனது? என்றும் மனம் போன போக்கில் வினாக்களை அள்ளி வீசியிருக்கிறார்.

தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகள், 2005-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது தான்.  இந்த குடும்ப அட்டைகளின் காலக்கெடு 2009-ம் ஆண்டில் முடிவுற்றது. அப்போது திமுக ஆட்சி நடந்தது. அந்த வருடத்தில்தான் புதிய குடும்ப அட்டைகளாக மாற்றி வழங்கி இருக்கவேண்டும்.

ஆனால் 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் குடும்ப அட்டைகள் உள்தாள் ஒட்டித்தான் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் திமுக ஆட்சியினரால் எடுக்கப்படவில்லை.

ஜெயலலிதா, 2011-ம் ஆண்டு மே திங்களில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இதன்மீது தனிக்கவனம் செலுத்தியதன் அடிப்படையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) தயாரித்து வழங்கிட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

அவரின் ஆணையின்படி இத்திட்ட செயல்பாட்டிற்கென 16.09.2014 அன்று அரசு இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.318.40 கோடி  ஒதுக்கியது.  இந்த 318 கோடி ரூபாய் நிதிதான் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.

இப்பணிகளை மேற்கொள்ள 18.09.2014 அன்று விலைப்புள்ளி கோரப்பட்டு, அதன் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கனிணிமயமாக்குதலுக்கான ஒப்பந்தம் 02.03.2015 அன்று மேற்கொள்ளப்பட்டது.

ஸ்மார்ட் கார்டு என்னும் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டோடு ஆதார் அட்டைகளுடன் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில்தான் ஸ்மார்ட் கார்டு வழங்க முடியும்.

ஆதார் எண்கள் பதிவு அடிப்படையிலேயே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட முடியும் என்பதால் முழுமையான ஆதார் அட்டை பதிவு பெறுவதற்காக 2016 டிசம்பர் முதல் வீடு வீடாக சென்று அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையாக ஆதார் பதிவு செய்யும் பணி துவங்கியது.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் வெளிப்படையாக, வெகு வேகமாக, நடைபெறப்போகிறது. இதை அறிந்துகொண்டு ‘நான் சொன்னேன் சொன்னதால்தான் நடந்தது’ என்று கூறுவதற்காகவே ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகா என்று வினவ விரும்புகிறேன்.

ஆக.. குடும்ப அட்டைகளின் காலக்கெடு முடிவடைந்தும் புதிய அட்டைகள் வழங்குவதற்கான எந்தவிதமான அடுத்த கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளமால் இரண்டு ஆண்டுகள் உள்தாள் ஒட்டிக் கொடுத்தது திமுக அரசு என்பதை வசதியாக மறந்துவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டவாறு நவீனமான, கச்சிதமான ஸ்மார்ட் கார்டு வழங்கிட வேண்டும் என்பதற்காக அவ்வாறு வழங்கப்படுகின்ற வரையில் உள்தாள் ஒட்டிக் கொடுப்பதை குற்றமாகக் கூறி எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

இனியும் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறான அறிக்கை வெளியிடும் தனது மனப்போக்கை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் காமராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.