சென்னை:
ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் – அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந்த ராஜாஜி சொல்லியிருக்கிறாரே, அதற்கு என்ன பதில் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று “Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” என்ற நூலில் ஆங்கில அறிஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததை தனது கட்டுரையில் பதிவு செய்தார் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து.
இதற்கு இந்துத்துவ்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மிகக் கடுமையாக வைரமுத்துவை சாடினார்.
இது குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
“ஆண்டாள் தேவதாசியாக இருந்தாள் என்று எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்து வைரமுத்து எடுத்துக்காட்டியிருக்கிறார். இதற்கு இந்துத்துவவாதிகள் வைரமுத்து மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். அலைபேசியில் அவரைத் தொடர்பகொண்டு, தரக்குறைவாக பேசுகிறார்கள்.
வைரமுத்து, ஒரு ஆராய்ச்சியாளர் எழுதிய நூலில் இருந்து சொல்லியிருக்கிறார். அந்த நூலுக்கு இதுவரையில் மறுப்புரை சொல்லியிருக்கிறார்களா இந்த வீராதி வீரர்கள்.. சூராதி சூரர்கள்..?
அதற்கு யோக்கியதை இல்லாதவர்கள், ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி’ என்று சொல்வதுபோன்று – வைரமுத்துவை மாட்ட வைத் திருக்கிறார்கள்.
அது ஜீயராக இருக்கட்டும்; ஆயராக இருக்கட்டும் – அங்கே போய் அல்லவா முட்டிக்கொள்ளவேண்டும். அதை விட்டுவிட்டு, வைரமுத்துவை தரம் தாழ்ந்து பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “இப்படி ஆண்டாளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக்கொண்டு தரம்தாழ்ந்து பேசும் இவர்கள் இந்து மதத்திற்கு எப்போது காப்பி ரைட் வாங்கினார்கள்?
இந்து மதத்திற்கு ஏதாவது பெயர் உண்டா? அது அந்நியர்கள் வைத்த பெயர்!
சங்கராச்சாரியாரே, தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் “இந்து மதம் என்ற பெயரை வெள்ளைக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் வைத்த பெயர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று வைரமுத்துவை தரம்தாழ்ந்து விமர்சிப்பவர்கள், இதற்காக வெட்கப்படவேண்டாமா?
தவிர, இந்து மதத்தில் கடவுளையே தூக்கிப் போட்டு, கடவுளின் கண்களில் காலை வைத்தவர்கள் எல்லாம் உண்டே! அந்தப் புராணத்திற்கு எல்லாம் இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்?
அதுமட்டுமல்ல, இராஜகோபாலாச்சாரியார் என்கிற இராஜாஜி, ஆண்டாள் பாத்திரமே ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லியிருக்கிறாரே! அது இவர்களுக்குத் தெரியுமா?
அரசியல் சட்டம் வழங்கி யிருக்கிற பேச்சுரிமை, கருத்துரிமையை மறுக்க, எவருக்கும் உரிமை கிடையாது.
எதிர்வினை என்பது தாறுமாறாக பேசுவது என்பதல்ல; கருத்தை கருத்தால் மறுக்க வேண்டும்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]