ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இம்மலை சுமார் முந்நூறு அடி உயரம் இருக்கும். திருக்குளத்தை அடுத்து திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னிருந்தே ஆஞ்சநேயருக்குத் திருக்கோயில் இருக்கிறது. இங்கு ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலும், புஷ்கரணியும் தான் முக்கியமாகக் கருதப்படுகிறது. இருந்தும் தற்பொழுது சிறிய விநாயகர் கோயிலும், அனுமார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் மலையில் அய்யப்பனுக்கும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் சிறிதாக இருந்தாலும் பழமை மாறாது பவித்திரமாக அதே சமயம் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
கர்ப்பகிரஹத்தில் மூலவர் ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி வடக்கு நோக்கி கெளபீனத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். செப்பு கவசம் போற்றப்பட்ட திருமேனி சுமார் மூன்று அடி உயரம் இருக்கும். மூலவரின் அத்துணை அம்சங்களும் செப்பு கவசத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் இருக்கிறது. வலது திருக்கரம் அபய முத்திரையும், இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தையும் தரித்துள்ளார். 300-400 ஆண்டுகள் முந்திய ஆந்திராவில் காணப்படும் ஆஞ்சநேய சிலாரூபங்களில் இருப்பது போன்று வால் தலைக்கு மேல் சென்று வாலின் நுனியில் சிறிய மணியுடன் காணப்படுகிறது. காதின் குண்டலங்கள் உள்ளன. மார்பினை மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. பளபளக்கும் கண்கள் ஆசிகளை அளிக்கிறது.
செல்வது எப்படி
சித்தூரிலிருந்து கனிபாக்கம் வழி அரகொண்டா செல்ல பஸ் வசதி உள்ளது. தமிழ் நாடு வேலூரிலிருந்து சித்தூருக்கு பேருந்து வசதி உள்ளது. மலையடிவாரம் அடைந்தால் இருபது நிமிடத்தில் நடந்து ஏறி விடலாம், இல்லையேல் ஆட்டோகள் இருக்கிறது. மலை உச்சியில் சில சிறிய பெட்டிக் கடைகள் உள்ளன. படங்கள், புஷ்பங்கள், மாலைகள், குளிர் பானங்கள், காபி, டீ விற்கப்படுகிறது.