அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், திமுகவுடன், 6 தொகுதிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், அனைத்திலும் தனது கட்சி தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. ஏனெனில், தனிச்சின்னம் என்பது நெருக்கடியான தேர்தல் காலங்களில் அதிக எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியவை.
தற்போது, பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்ப்புறம் இருக்கும் சூழலில், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பெரிய சந்தேகத்திற்குரியவையாக இருக்கும் நிலையில், விசிக போன்ற கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால், அது அக்கட்சியைவிட, திமுகவுக்கே பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
ஏனெனில், 10 இடங்களுக்கு குறைவாக ஒரு கட்சி போட்டியிட்டால், அக்கட்சிக்கு, ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு தனிச் சின்னத்தையே ஒதுக்குவார்கள். அந்தவகையில், விசிகவுக்கு 6 தொகுதிகளிலும் 6 சின்னங்கள் ஒதுக்கப்படும்.
அந்த சின்னங்கள், வேண்டுமென்றே தாமதமாக ஒதுக்கப்படும். இதன்மூலம், சின்னத்தை வரைவதற்கே தொகுதிக்குள் இடம் இருக்காது. மேலும், அந்த புதிய சின்னத்தை அறிமுகம் செய்து, பிரச்சாரம் செய்வதற்கு போதிய காலஅவகாசமே இருக்காது.
இவைதவிர, விசிக போட்டியிடும் வேட்பாளரின் பெயரிலேயே, அதே இனிஷியலுடன் ஒருவரை, எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்து வருவார்கள் எதிர்க் கூட்டணியினர். அந்த நபர், அதே தொகுதியில் சுயேச்சையாக நிறுத்தப்படுவார். அந்தப் பெயர் பெரியளவில் பிரச்சாரம் செய்யப்படும். மேலும், அந்த சுயேச்சைக்கு ஒதுக்கும் சின்னம், விசிகவுக்கு ஒதுக்கும் சின்னத்தின் வடிவத்தை ஒத்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும். மேலும், விசிக வேட்பாளர் போட்டியிடும் சின்னம், வாக்குப் பதிவு இயந்திரத்தின் கடைசியில் இடம்பெறுமாறு வைக்கப்படும்.
இத்தகைய பல்வேறு சிக்கல்களால், வெற்றிபெற வேண்டிய ஒரு தொகுதி, எதிர்க்கூட்டணிக்கு எளிதாக சென்றுவிடும். இதைத்தான் திமுக, தனது சிறிய தோழமைக்கட்சிகளுக்கு வலியுறுத்துகிறது. ஆனால், அந்தக் கட்சிகளுக்கோ வேறுசில பிரச்சினைகள்! திருமாவின் வழியில் வைகோ உள்ளிட்டவர்களும் பயணப்பட எத்தனிப்பார்கள்.
சிறிய கூட்டணி கட்சிகளை தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதித்த காரணத்தால், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக நஷ்டமடைந்தது. எனவே, இத்தேர்தலில் அதே ரிஸ்க்கை எடுக்க திமுக விரும்பவில்லை.
எனவே, இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்படவில்லை என்றால், சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு ஆபத்து மிக அதிகம்!