சென்னை

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கியதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர்.

மத்திய அரசு 2019 ஆம் வருடம் அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தது.

இது விரைவில் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.  நேற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடுமுழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச் சார்பின்மையைச் சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும்; 

இதன் வழி அரசியல் ஆதாயம் தேடும் பாசிச மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 15.03.2024 (வெள்ளிக்கிழமை) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும்”. 

என்று அறிவித்துள்ளார்.