விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார், “காலா” படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை முகநூலில் கிண்டல் செய்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“சொன்னாலும் சொல்வார்கள்” என்ற தலைப்பிலான அந்த பதிவில், “ஏப்ரல் 27 ஆம் தேதி காலா வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனே, பூனா ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைப்பற்றி அம்பேத்கருக்கு காந்தி கடிதம் எழுதிய நாள் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி. அதை நினைவுபடுத்தத்தான் ஏப்ரல் 27 ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்!!” என்று ரவிக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.
இது பா.ரஞ்சித் தரப்பினரை வருத்தமடைய செய்துள்ளது. அவர்கள், இது குறித்துத் தெரிவிப்பதாவது:
“திரைப்பட இயக்குநர் என்பதோடு, தன் மீது தலித் என்ற அடையாளத்தையும் விரும்பி ஏற்றுக்கொண்டவர் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்.
அவரது முதல்படமான, “அட்டகத்தி”யும் தலித் மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதாக எடுக்கப்பட்டதுதான். அடுத்தபடம் “மெட்ராஸ்” படமும் அதே போலத்தான் அமைந்தது.
அப்போது, “தலித் அரசியலை வெளிப்படையாகவே பேசுகிறது மெட்ராஸ்’” என்றார் இயக்குநர் ரஞ்சித்.
தொடர்ந்து ரஜினியை வைத்து அவர் இயக்கிய கபாலி திரைப்படமும் அதே போல அடையாளப்படுத்தப்பட்டது.
“நான் கோட் சூட் போடுவேண்டா… நான் கால் மேல் கால் போட்டு அமருவேன்… நான் ஆளப்பிறந்தவன்டா” போன்ற வசனங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழும் வசனங்களாக நோக்கப்பட்டன.
இது குறித்து பேசிய பா.ரஞ்சித், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் ஒருவர் அணியும் உடை, பேசும் வசனம் அவசியமான இருந்தது” என்றார்.
திரைப்படங்களுக்கு வெளியிலும் தலித்களுக்கான குரலாய் பா.ரஞ்சித் ஒலித்துவருகிறார்.
சென்னையில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவுக்காக உரிமையேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் இயக்குநர் அவர், “தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை ஒத்துக்கொள்ள வேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் தமிழன் தமிழன் என்று பூச்சாண்டி காட்டப்போகிறீர்கள்? இங்கே ஊருக்கு ஊர் சேரியும் காலனியும் இருக்கிறது. நான் இன்னும் சேரியில்தான் வாழ்கிறேன். வீதிக்கு ஒரு சாதி இருக்கிறது. வீடு வாடகைக்குக் கேட்டால், வீட்டில் என்ன கறி சமைப்பீர்கள் என்று கேட்டுதான் வீடு விடுகிறார்கள். இப்படி தமிழன் சாதியால் பிரிந்து கிடக்கிறான்” என்று ஆவேசமாக பேசினார்.
இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘Beware Of castes- Mirchpur’ என்ற.. தலித் மக்களின் குரலை வெளிப்படுத்தும்.. ஆவணப்படத்தையும் ரஞ்சித் தயாரித்தார். (இயக்கம்: ஜெயக்குமார்)
அதோடு, நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அம் மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தின. அதில் சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்களின் இசையான கானாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
இப்படி திரை ஆக்கத்தில் மட்டுமின்றி, திரைக்கு வெளியிலும் தலித் முகமாக செயல்படும் ஒருவரை, தலித் மக்களின் உரிமைக்காக போராடும் கட்சியாக வெளிப்படுத்தும் வி.சி.க. பிரமுகர் கிண்டலாக விமர்சிப்பது சரிதானா” என்று ஆதங்கத்துடன் கேட்கின்றனர் பா.ரஞ்சித் தரப்பினர்.