சென்னை

ரும் நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் அக்கட்சி கேட்டுள்ளது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்று இறுதி செய்து வருகிறது. காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க இதுவரை. பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

இன்று 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. – வி.சி.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் . மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் . உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

“கடந்த  2019 ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது. நாங்கள் 3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகள் கேட்டுள்ளோம். தற்போது தி.மு.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என்ற அளவிற்கு விரிவடைந்துள்ளதால் இக்கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்.

நாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதி பட்டியலை அளித்துள்ளோம். அதாவது சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். மேலும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தொகுதி விருப்ப பட்டியலையும் வழங்கி உள்ளோம்.  இதுகுறித்த இறுதி முடிவு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்படும்.”

என்று தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் வருட மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குச் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் சிதம்பரம் தொகுதியில் வி.சி.க. தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.