சென்னை:
திருபுவனம் அருகே நடந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதத்தின் பெயரால், சாதயின் பெயரால் நடக்கும் எந்த வன்முறையையும் கண்டிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
மதமாற்றத்தை தடுக்க முயன்றார் என்றும்,மதமாற்றம் செய்ய வந்தவர்களின் நெற்றியில் திருநீறு பூசியதால் கொல்லப்பட்டார் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
அதேவேளையில், தனிப்பட்ட விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாகவும் பதிவுகள் வெளியாகின்றன. எனவே ராமலிங்கம் படுகொலை வழக்கை தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சிபிஐ புலனாய்வு அமைப்போ விசாரிக்க வேண்டும்.
மதத்தின் பெயரில் நடந்திருந்தாலும், வன்முறையை தூண்ட யாரும் சதி செய்திருந்தாலும், வதந்தியை பரப்பினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.