சென்னை: திறந்தநிலைப் பல்கலைக் கழகங்களில் உயர்பட்டப்படிப்பு படிப்பவர்கள், அரசின் பதவி உயர்வுக்கு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அரசுப்பணிக்கு செல்லும் அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார்.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்காமல் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், அரசுத் துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 31ஆம் தேதி தீர்ப்பளித்தது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பார்த்தசாரதி, ‘வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில், அடிப்படை இளங்கலை பட்டம் இல்லாமல், திறந்தநிலைப் பல்கலைக் கழக அமைப்பில் பெறப்பட்ட முதுகலைப் பட்டத்தை, பதவி நியமனம் அல்லது பதவி உயர்வுக்குத் தகுதியானதாக கருத முடியாது என்றே நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையில், அரசாணை எண் 107இன் படி, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் முறையாகப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழ்கள், பிற பல்கலைக் கழகங்களில் வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் போலவே செல்லுபடியாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை 242இன் படி, 10,12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளங்கலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லுபடியாகும்’ எனத் தெரிவித்தார்.