சென்னை
கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி உள்ள 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். கிர்கிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்குப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு அதிக அளவில் மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் வெளிநாட்டு மாணவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி அந்நாட்டின் பல்கலைக் கழகம் அனைத்து மாணவர்களும் அவரவர் பாதுகாப்பை முன்னிட்டு உடனடியாக கிர்கிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. கிர்கிஸ்தானில் தொடர்ந்து தங்க விரும்பினால் தங்களுக்கு எது நேர்ந்தாலும் இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் அரசுக்குப் பொறுப்பு இல்லை என மாணவர்களும் அவர்கள் பெற்றோரும் எழுத்துப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளும் தங்கள் மாநில மாணவர்களைத் திரும்ப அழைத்து வந்துள்ளது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த 670 மாணவர்கள் இன்னும் கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இதுவரை ஏற்காமல் உள்ளன.
இதையொட்டி மாணவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வாழப்பாடி இராம. சுகந்தனிடம் முறையிட்டுள்ளனர்.
வாழப்பாடி இராம சுகந்தன் இன்று கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 670 மாணவர்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து உடனடியாக தமிழகத்துக்கு அழைத்து வருமாறு தமிழக முதல்வர் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.