ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அஷோக் கெலாட் அரசுக்கு, அம்மாநில பாரதீய ஜனதாவின் பிரதான தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா உதவி செய்கிறார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் அம்மாநிலத்தின் பா.ஜ. கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹனுமன் பெனிவால்.
இந்த ஹனுமன் பெனிவால் என்பவர் வசுந்தரா ராஜேவின் கடும் விமர்சகராக அறியப்பட்டவர் மற்றும் கடந்த 2018ம் ஆண்டு அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், தற்போது பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சித் தலைவராக இருக்கிறார். தற்போது ராஜஸ்தானின் நகாவுர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் இவர் கூறியுள்ளதாவது, “முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, அஷோக் கெலாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர், சிகார் மற்றும் நகாவுர் பகுதிகளின் ஒவ்வொரு ஜாட் இன சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து, சச்சின் பைலட்டிடமிருந்து விலகியிருக்குமாறு கூறியுள்ளார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது” என்றுள்ளார்.
ராஜஸ்தானில், காங்கிரஸ் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கிளர்ச்சி செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ஹனுமான் பெனிவால் இவ்வாறு அறிக்கை வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்கள் அவரிடம் பேசியுள்ளனர். வசுந்தரா ராஜே எங்களுடைய மதிப்புவாய்ந்த தலைவர்” என்றுள்ளார் ராஜஸ்தான் மாநில பா.ஜ. தலைவர் சதீஷ் புனியா.