சென்னை: திருச்சி காவல்துறை அதிகாரியின் நடவடிக்கை நாளுக்கு நாள் அரசியல் கட்சி தலைவர்போல காணப்படுகிறது. அவருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே நடைபெற்ற வரும் மோதல் சந்தைக்கடை மோதல் போல தீவிரமாகி வருகிறது.
திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய திமுக அரசும், மாநில டிஜிபியோ ஆர்வம் காட்டாத நிலையில், இது அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெறும் மோதல் போல நீடித்து வருகிறது. இது மக்களிடையே காவல்துறை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு களத்தில் இறங்கியுள்ளனர். இது ஆரோக்கியமானமாக இல்லை. அரசியல் கட்சியினர் தவறு செய்தால், அதற்கான ஆதாரத்துடன் பாரபட்சமன்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி, சீமானுக்கு எதிராக ஏட்டிக்கு போட்டியாக அரசியல் கட்சி தலைவர் பேசுவதும், பதிவிடுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காவல்துறை சாதிய ரீதியாக செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் பலமுறை தெரிவித்துள்ளார். அண்மையில் கூட இதே கருத்தை திருமா மண்டும் பேசியிருந்தார். இந்த நிலையில் சீமான் விவகாரத்தில் அவரது கருத்து உண்மைதான் என்பதை வெளிச்சம்போட்டு காட்மடியுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பக்கம் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எஸ்பி வருண்குமார் கைது செய்து வரும் நிலையில், சீமானையும் கைது செய்வார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், இந்த வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார், நேரடியாக என்னுடன் மோத தயாரா என்றும் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா பண்ணிட்டு வாங்க.. மோதி பார்க்கலாம். என வருண்குமார் எஸ்பிக்கு சீமான் சவால் விட்டுள்ளார்.
முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். ஆடியோ லீக்: இதையடுத்து சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அதே சமயம் அவரின் போனில் இருந்து சீமான் பேசியதாக பல ஆடியோக்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான் காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் ஆடியோ இருந்தது. அதில், காளியம்மாள் எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.
மறுத்த நாம் தமிழர் கட்சி, இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். ஏஐ வைத்து இப்படி எல்லாம் ஆடியோ உருவாக்கலாம் என்றனர். இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட சீமானின் பேச்சைத்தான், திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக சாட்டை துரைமுருகனும் காணொளி வெளியிட, சீமான் ஒரு பக்கம் வருண்குமார் பெயரை குறிப்பிடாமல், ஐபிஎஸ் படித்தால் அதற்குண்டான வேலையை பாருங்கள். திமுக ஐடி விங்க் போல செயல்படாதீர்கள் என்று ஒருமையில் பேசி திட்டி இருந்தார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் வருண்குமாரை எல்லை மீறி திட்டத் தொடங்கவே, இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.
அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாகவும், பிச்சையில் கிடைத்த பதவியை வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார். இதைத்தொடர்ந்து, சில நாம் தமிழர் கட்சியினர் வருண் குமார் குடும்பம் பற்றியும் மோசமாக பேசினர்.
இதில்தான் திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப் பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது பற்றி வருண் குமார் செய்துள்ள போஸ்டில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன் என கூறியுள்ளார். இந்த விவகாரத்தல், கண்டிப்பாக கைது நடவடிக்கைகளை எடுப்பேன்.. மாற்றமே இல்லை.. யாரையும் விட மாட்டேன் என்று எஸ்பி வருண் குமார் சபதம் எடுத்துள்ளார். சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சரமாரி புகார்களை வருண் அடுக்கி உள்ளார்.
இந்த விவகாரம் அரசியல் கட்சிகளின் மோதல் போல சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் வருண்குமார் ஐபிஎஸ்-ஐ கடுமையாகவும், அருவறுக்கத்தக்க வகையிலும் விமரிசித்து வருகன்றனர்.
மேலும், வருண் புகைப்படத்தை தவறாக சித்தரித்து போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இது வைரலானது. @kuma90313394 என்ற ஐடி மூலம் இந்த பதிவு வெளியான நிலையில், அதை வருண் ஐபிஎஸ் எச்சரித்து உள்ளார். அதில், விரைவில் இவனும் @kuma90313394 இவனது முதலாளியும் இவர்கள் செய்த/செய்கின்ற குற்றத்திற்கு பிடிபடுவார்கள். இவன் பெயர் செல்வகாந்தன் DoB: 24-9-73. இவனது மனைவி பெயரில் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி முகவரியில் போலி பாஸ்போர்ட் T88…..64 வாங்கியுள்ளான். தற்சமயம் கனடாவில் Rogers Communication குழுமத்தில் பணிபுரிகிறான்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றம் புரியும் இந்த மன நோயாளி பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. போலி பாஸ்போர்ட் வாங்கியது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தொடர்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பிரிவினை வாதம் உட்பட. இவனது கனடா கைபேசி எண் +16******2019, என்று எச்சரித்து உள்ளார்.
இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக என எந்தவொரு கட்சியும் கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், அதிமுக திடீரென உள்ளே புகுந்து, பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது.
அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார்.,IPS மற்றும் அவரது மனைவி அவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் அருவருக்கத்தக்க வெறுப்புப் பிரச்சாரமானது, இந்த விடியா திமுக ஆட்சியில் யாருக்கும், குறிப்பாக காவல்துறையினருக்கும் இணையவெளியில் கூட பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகிறது.
வெவ்வேறு இயக்கக் கோட்பாட்டில் பயணித்தாலும், மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்கள் எதையும் நேரடியாக எதிர்கொள்பவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவர் கூற்றின் படி, அவர் இதுபோன்ற அவதூறுகளில் இறங்கமாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
யாரோ சில விஷமிகள் காவல்துறையினர் குறித்தே இதுபோன்ற ஆபாசப் பதிவுகளை தைரியமாக பதிவிடுகிறார்கள், ஆக்கப்பூர்வமாக விமர்சித்தால் கூட “உடனே” கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விடியா திமுக அரசு, காவல்துறையின் உயர் அதிகாரிகள், அதுவும் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி, வந்திதா பாண்டே.,IPS மீது வீசப்படும் மிகவும் தரம் தாழ்ந்த ஆபாச அவதூறுகளை கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், பொதுத்தளத்தில் எதிர்ப்பு வந்ததும் தாமதமாக 2 பேரைக் கைது செய்து ஆமை வேகத்தில் செயல்படுவதும் ஏன்?
திமுகவின் கரை வேட்டி இழுத்த இழுப்பிற்கு வரும் FIR-களும் கைவிலங்குகளும், மதிப்புமிக்க காக்கிச் சட்டைகள், தங்களை தாங்களை பாதுகாக்க வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? காவல்துறை உயர் அதிகாரிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த ஆபாச வெறுப்புப் பிரச்சாரத்தை கண்டு கொள்ளாத அரசின் செயல் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வருண்குமார் சீமான் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்தறை அதிகாரி, அரசியல் கட்சி தலைவர் போல, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு பதில் கொடுப்பதும், இரு தரப்பினரும் மாறி மாறி தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது, மக்களிடையே காவல்துறை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த நிலையில், வருண்குமார் ஐபிஎல் சீமானின் பிச்சையெடுத்து வந்த ஐபிஎஸ் பதவி என்பதற்கு பதில் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது ஐபிஎஸ் பதவி, திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010ல் All India Rank 3 எடுத்ததை நினைவு கூறுகிறேன் என என காட்டமாக பதில் கொடுத்துள்ளதுடன்,. உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும். பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசு வது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன்.
நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிகாரிகள் தங்களது நிலை மறைந்து, ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக செயல்பட்டு வருவதின் எதிரொலியே இந்த அக்கப்போர்….