சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அழகுபடுத்தும் வகையில் ஏராளமான நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்பட பல்வேறு செயல்களுக்கான மொபைல் செயலிகளும் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு இன்று தொடங்கியது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற அமர்வில், மேயர் பிரியா ராஜன் 64 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு:-

  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுப்படுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு
  • சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மிகப் பெரிய குளங்களைப் புனரமைக்க ரூ.143 கோடி ஒதுக்கீடு
  • தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நிர்பயா திட்ட நிதிகளை கொண்டு 366 இடங்களில் உள்ள 918 கழிப்பிட இருக்கைகள் மற்றும் 671 சிறுநீர் கழிப்பான்கள் 36.34 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
  • பாலின சமத்துவத்தை பிரிந்துகொள்ள சென்னைப் பள்ளிகளில் பாலினக் குழுக்கள்.
  • சென்னைப் பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள்.
  • சென்னைப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி.

  • பள்ளிகளில் இளைஞர்  நாடாளுமன்றக் குழுக்கள்.
  • சாலையில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தங்கவைக்க ஒருங்கிணைந்த திட்டம்.
  • மாநகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு மாதம் 100 டன் அளவு உரம் தயாரித்து சந்தைப்படுத்தப்படும்.
  • கழிவுகள் கொண்டு உயிரி எரிவாயு (bio-gas) உற்பத்தி செய்ய புதிதாக 6 நிலையங்கள் அமைக்கப்படும்.
  • மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர சாய்தளப் பாதை.
  • சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை பராமரிக்கவும் மேம்படுத்தவும்ம் ரூ.16.35 கோடி.
  • சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை டிஜிட்டல் முறையில் மாற்ற ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.
  • தனியார் பங்களிப்புடன் 1000 பேருந்து நிழற்குடைகள் மறுசீரமைப்பு.
  •  நம்ம சென்னை செயலி புதிய வசதிகள்.
  • நிலம் தொடர்பான தகவல்களை அறிய செயலி
  • டிஜி லாக்கர் (Digi locker) வழியாக வர்த்தக உரிமங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி
  • தானியங்கி கருவி மூலம் சொத்து வரி செலுத்த ஏற்பாடு
  • சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க, e-office நவீன QR குறியீட்டினை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரி செலுத்த வழிவகை.