மதுரை: தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வர இருக்கும் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் இதுவரை 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருகின்றனர். இந்த நிலையில், தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வேட்பாளர் அறிமுகம் செய்யும் கூட்டங்களும், நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை ஆரப்பாளையத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சி ஊழல் ஆட்சி என்று கூறியதுடன், தமிழக சட்டமன்ற தேர்தலில், தாம் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 2 முறை தேர்தலில் வெற்றி பெற்ற பெருமிதத்துடன் கூறினார்.
இந்தஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறிய அமைச்சர் பிடிஆர், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம், அதற்காகவே அவர் பாடுபட்டு வருகிறார் என்று கூறினார்.