ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த வந்தேபாரத் ரயில் பசு மாடு மீது மோதியதில் அந்தப் பசு மாடு 100 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.
ரயில் மோதியதில் தூக்கிவீசப்பட்ட பசு ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதையைக் கழிக்க வந்த ஒருவர் மீது மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆரவல்லி விஹார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஷிவ்தயாள் சர்மா என்பவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து 23 ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்ற இவர் சிறுநீர் கழிக்க வந்த இடத்தில் நடைபெற்ற இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய பசு மாடும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மும்பை – குஜராத் இடையே வந்தே பாரத் வழித்தடத்தில் கால்நடைகள் மீது ரயில் மோதி அதிகளவு விபத்து ஏற்பட்டு வருவதை அடுத்து அந்த வழித்தடத்தில் சுற்றுச் சுவர் அமைக்க மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் பாதையில் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.