திருப்பதியில் இருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று மாலை தீ பிடித்ததாக தவறான எச்சரிக்கை எழுந்ததை அடுத்து அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

கூடூர் அருகே சென்று கொண்டிருந்த போது சி-13 பெட்டியின் கழிவறைக்கு சென்ற ஒருவர் உள்ளே சிகரெட் பற்றவைத்துள்ளார்.

இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த புகை மற்றும் தீயை கண்டுபிடிக்கும் கருவி மூலம் ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த தீ அணைப்பான் செயல்பட தொடங்கியது.

தானியங்கி தீ அணைப்பான் மூலம் பெட்டி முழுவதும் ஏரோசால் தெளிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அலறியடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவசர தொலைபேசி மூலம் ரயிலின் ஓட்டுனரை தொடர்பு கொண்ட பயணிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

ரயில் மாலை 5 மணிக்கு மனுபோலு என்ற ரயில்நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த ரயில்வே போலீசார் சி-13 பெட்டியின் கழிப்பறை ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது உள்ளே இருந்த நபர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரைப் பிடித்து நையப்புடைத்து நெல்லூர் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறியது தெரியவந்துள்ளது.

டிக்கெட் எடுக்காமல் ஒரு பயணி வந்தே பாரத் ரயிலில் ஏறியது மட்டுமல்லாமல் சிகரெட் பற்றவைத்து பயணிகளின் அடிவயிற்றில் நெருப்பை மூட்டியதற்காக ரயில்வே சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளார்.