சென்னை
வரும் டிசம்பர் மாதம் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தமிழகத்தில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளிடையே இந்த ரயில்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளதால் நீண்ட தொலைவுக்கு இந்த ரெயில்களை இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது., படுக்கை வசதியை விரும்பும் பயணிகள் இந்த ரயில்களை தேர்வு செய்வதில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு இரவு நேர பயணங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையே வந்தே பாரத் சேவையை அறிமுகப்படுத்தும் விதமாக வந்தே ஸ்லீப்பர் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வரும் நவம்பர் மாதம் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என ஐ.சி.எப். நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், இரண்டு வந்தே ஸ்லீப்பர் ரயில்களை ஒதுக்குவது குறித்து ரயில்வே வாரியம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. திருவனந்தபுரம் கொச்சுவேலி -பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி-ஸ்ரீ நகர் ஆகிய வழித்தடங்களில் வந்தே இந்த ஸ்லீப்பர் ரெயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படலாம் எனவும், வாரத்திற்கு மூன்று நாட்கள் சேவையாக ஸ்ரீநகர் அருகே உள்ள பத்காம் ரயில் நிலையம் வரை இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ரயில் சேவை உதம்பூர் – ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே லைன் பணிகள் முடிந்த பிறகு டிசம்பர் மாதம் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.