சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சமீபத்தில் வெள்ளை புலி ஒன்று உயிரிழந்த நிலையில், கடந்த 15 மாதங்களில் 12 புலிகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்து உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (வண்டலூர் உயிரியல் பூங்கா). தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்றான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருடந்தோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், கொரோனா காலக்கட்டத்தில், சுமார் 8 மாதங்கள் பூங்கா அடைக்கப்பட்டிருந்த நிலையில், பல மிருகங்களும் பலியாகி உள்ள சோகம் அரங்கேறி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி, சில நாட்களுக்கு முன்பு அரிய பலி வகையான வெள்ளைபுலி உயிரிழந்துள்ளது குறித்து கூறியவர், அந்த புலி நரம்பியல் நோயான அட்டாக்ஸியா தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாகவும், இந்த நோய்க்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக கொரோனா காலக்கட்டமான 2021ம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் உள்ள சில விலங்குகள் மரணததை தழுவின. இதில் இளம் சிங்கம், நீலா, ஜூன் 3ந்தேதி அன்று மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. இதையடுத்து, அனைத்து விலங்குகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அதனுடன் இருந்து வந்த மற்ற சிங்கங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்தசிங்கங்களில் பல அடுத்தடுத்து மரணத்தை தழுவின. மொத்தத்தில் கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களால், 4 சிங்கங்கள், 3 புலிகள், ஒரு சிறுத்தை உள்பட மொத்தம் 8 விலங்குகள் பலியாகி உள்ளன. கடந்த அக்டோgர் மாதம் பல தீக்கோழிகளும் நோய் பாதிப்பு காரணமாக இறந்தன.
அதையடுத்து இந்த ஆண்டில் (2022 மார்ச் 25ந்தேதி வரை) இதுவரை மேலும் 4 விலங்குகள் உயிரிழந்துள்ள. அதன்படி, ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு ஜாகுவார் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியை உயிரிழந்துள்ளன.
விலங்குகளை காப்பாற்ற முடியாததற்கு காரணம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறந்த கால்நடை மருத்துவமனை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அங்குள்ள கால்நடை மருத்துவர்களிடம் விலங்குளுக்கு சோதனை செய்யும், உடல் வெப்பநிலை ஸ்கேனர்கள் போன்ற அடிப்படை சாதனங்கள் கூட இல்லை என்று விமர்சித்துள்ளனர். மேலும்,பூங்காவை அதிகாரிகள் சரியான முறையில் பராமரிப்பதில்லை என்றும், மோசமான பராமரிப்பு காரணமாகவே பல விலங்குகள் உயிரிழந்து வருகிறது என்றும், கடந்த ஜனவரியில், கால்நடை மருத்துவர்கள் நாசி சவ்வு சேகரிக்கும் போது சிறுத்தை ஒன்று பழுதடைந்த கூண்டுக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உயிரியல் பூங்கா அதிகாரிகளோ, விலங்குகளை தேவையான சில மருத்துவமனை உபகரணங்களை அனுப்ப மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது, விரைவில் வந்துவிடும் என்று கூறி வருகின்றனர்.