கோவை: கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில், சில   அதிமுக எம்எல்ஏக்களும் இன்று சந்தித்து பேசினர்.   பாஜக உடன்  உறவு முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள்  பாஜக அமைச்சரை சந்தித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பாஜக இடையே யார் பெரியவர் என்ற ஈகோ காரணமாக கூட்டணி முறிந்துள்ளது. இதை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, பாஜக தலைமை தமிழக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் அறிக்கை கேட்டு வாங்கியது. மேலும்  மாநில பாஜக தலைவர் அண்ணாமலையையும் டெல்லி வரச்செய்து ஆலோசனை நடத்தி வருகிறது. டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, நேற்று அங்கு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார்.  இன்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், இன்று  பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை  வருகை தந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.  முன்னதாக வானதி சீனிவாசன் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், அதைத் தொடர்ந்து,  அதிமுக எம்எல்ஏக்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு முதல்முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.